முதல் சைகை (அ) செய்கை
சென்ற வாரம் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் தாக்கல் செய்த பிறகு, அணைத்து எதிர் கட்சிகளும் குய்யோ முறையோ என்று கத்திக்கொண்டு இருக்கின்றன - அவர் பெட்ரோல் மற்றும் டீஸல் மீது எக்ஸ்சைஸ் வரியை ரூ. 1 ஏற்றி விட்டதற்கு. ஏன், ஆளும் கட்சியான சோனியா காங்கிரஸின் நண்பர்களான திரிணமுல் மம்தாவும், தி. மு. க. தலைவர் கருணாநிதியும் கூட ஆளும் கட்சிக்கு மிகவும் நெருக்குதல் கொடுக்கிறார்கள் என்று பேச்சு. கருணாநிதி, ஏற்றிய வரியை குறைக்க வேண்டும் என்று அறிக்கை விட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு 2011 இல் வரப்போகும் தமிழக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.
ஆனால், அதே 2011 சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டே, இன்னொரு கட்சியின் தலைவர் (தலைவி), சோனியா காங்கிரசுக்கு செல்லமான கோபத்துடன் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார் பாருங்கள்: "பட்ஜெட்டின் நோக்கம் நன்றாகத்தான் உள்ளது; சாராம்சம்தான் குறைவு" என்று. ஆஹா! என்னே ஒரு எதிர்ப்பு. அந்தோனியோ மைனோ என்று தன்னால் வசை பாடப்பட்ட அதே சோனியாவின் தலைமையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தயவு இப்போது தனக்கு இருந்தால்தான், தி. மு. க. வின் பணம் கொடுத்து வோட்டு வாங்கும் கணக்கை எதிர்கொள்ள முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட அ.இ.அ.தி.மு.க. வின் தலைவி ஜெயலலிதாவின் இப்போதைய நிலையை தெள்ள தெளிவாக படம் பிடித்து காட்ட இந்த அறிக்கையின் tone மிகவும் உதவுகிறது அல்லவா?
அதே சமயம், இந்த இரு பெண்மணிகளின் எதிர்கால நட்பு ஒருவேளை உண்மையாகி போய்விட்டால், தனக்கு ஒரு "வெளியேற்ற ஞாயம்" வேண்டி கருணாநிதியும் தன்னுடைய அறிக்கை மூலம் இப்போதே தயார் செய்து கொண்டுவிட்டார்போலவும் தோன்றுகிறது. சபாஷ், சரியான போட்டி ஆரம்பம்.
முதல் அடி
இந்திய கிரிக்கெட் வாரியம் அதாவது BCCI ஒரு வியாபார நோக்கம் மட்டுமே உள்ள நிறுவனமே அன்றி அதற்கும் charity எனப்படுகின்ற தொண்டு செய்யும் எண்ணத்துக்கும் எந்தவிதமான சம்மந்தமோ, அதற்கான சாட்சியங்களோ எதுவுமே இல்லை என்று இந்திய வருமான வரி துறையே ராஜ்ய சபாவில்தெரிவித்து இருக்கிறது.
BCCI சில ஆண்டுகளுக்கு மும்பு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் தான் இந்திய அரசாங்க வாரியம் இல்லை என்றும் ஒரு தனியார் அமைப்புதான் என்றும் கூறி உள்ளது இங்கு நினைவு கூற தக்கது. இப்போது, BCCI ஒரு வியாபார அமைப்புதான் என்று வருமானவரி துறையே கூறிவிட்டதால், இதுவரை அது அனுபவித்து வந்த எல்லா வருமானவரி விலகல் (I.T. Exemption) சமாச்சாரங்களும், இனிமேல் விலகிவிடும். இதனால், BCCI யின் வருமானத்தில் மிக பெரிய அடி விழ போவது நிச்சயம்.
முதல் தோல்வி
2010 ஆம் ஆண்டின், முதல் மெகா பட்ஜெட் பாலிவுட் படமான ஷா ரூக் கான் நடித்த கரன் ஜோகர் இயக்கிய "மை நேம் இஸ் கான்" படம் ஒரு மிக பெரிய தோல்வியை தழுவி உள்ளது. ஷா ரூக் கான் நடித்த "மை நேம் இஸ் கான்" படம் மண்ணை கவ்விய செய்தியை "ஹிந்து பிசினஸ் லைன்" நாளிதழ் இங்கேவெளியிட்டுள்ளதை காணலாம்.
வெறித்தனமாக இப்படத்தை ப்ரொமோட் செய்த ஷா ரூக் மற்றும் கரன் ஜோகர் இருவருக்கும் விழுந்த பலமான அடி இது. இந்த இருவரின் முந்தைய படமான"கபி அல்வித நா கெஹனா" இந்தியாவில் அடி வாங்கினாலும், வெளி நாடுகளில் வசூலில் அள்ளியதால், தப்பித்தோம் பிழைத்தோம் என்று
பிழைத்த இருவரும்,அடுத்த படத்தையும் சீரியஸ் படமாகவே எடுத்ததால் வந்த வினை இது.
தான் அமெரிக்காவில் விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டதை இப்படத்தின் வியாபாரத்திற்கு உதவும் வகையில் பெரிய பிரச்னையாக்கி தனக்கு விளம்பரம் தேடிக்கொண்ட ஷா ரூக், சிவ சேனாவின் மூளை கெட்ட போராட்டத்தையா சும்மா விட்டு விடுவார்? அதையும், தன் படத்தின் விளம்பரத்திர்க்காகவே ஷா ரூக்கும் , மீடியாவும் போட்டி போட்டு
கொண்டு உபயோகித்துக்கொண்டனர். அதனால், இப்படம் பெரிய "ஒபெநிங்" பெற்று ,உலகெங்கிலும் முதல் 10 நாட்களிலேயே சுமார் 150 கோடி ரூபாய் வசூலித்தது.
ஆனால், அதற்க்கு பிறகு படம் படுத்து விட்டது. நகரங்களில் வெறும் 35சதவீதமும், மற்ற பகுதிகளில் வெறும் 10 சதவீதமும்தான் தினசரி வசூலாம்.எனவே, Fox Searchlite என்ற கம்பெனி இப்படத்தை வெளியிட கொடுத்தபணமான சுமார் 250 - 300 கோடி ரூபாய் இப்படம் வசூலிக்குமா என்பதேஇப்போது கேள்விக்குறி ஆகிவிட்டது. அதற்கும் மேல் வசூலித்தால்தான் அனைவரும் லாபம் பார்க்க முடியும் என்பதால், இப்படம்ஒரு "தோல்வி படம்" என்பது உறுதி ஆகி விட்டது.
முதல் வீராங்கனை
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 200 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்த, சச்சின் டெண்டுல்கரின் சாதனை பெருமைபடதக்கது. அவர் சாதித்தவை இரண்டு: முதலாவது, ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த ஆண் வீரர். இரண்டாவது சாதனை, ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் ஆண் வீரர்.
ஆனால், அவரின் 'விசிறிகள்' அடிக்கும் கூத்தை பார்த்தால், டெண்டுல்கர் என்னவோ இந்த சாதனைகளை சாதித்த முதல் வீரர் போல் அவரின் விசிறிகள் சித்தரிக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையான நிலவரம் தெரியாமல் இருக்கலாம். அல்லது, தெரிந்தும் வேறு யாருக்கு இது தெரிய போகிறது என்ற அலட்சிய மனோபாவத்தினால், அவர்கள் டெண்டுல்கர்தான் இந்த சாதனைகளை சாதித்த (முதல் ஆண் வீரர் என்பதற்கு பதிலாக) முதல் வீரர் என்று கூறுகிறார்கள் போலும்.
To set the record straight, டெண்டுல்கருக்கு சுமார் 13 ஆண்டுகள் முன்னமேயே, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெலிண்டா கிளார்க் என்ற பெண் கிரிக்கெட் வீராங்கனை 1997 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த பெண்களுக்கான உலக கோப்பை விளையாட்டுகளில், 229 ரன்கள் குவித்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக பட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையையும், ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் ஒருங்கே பெற்று விட்டார். இது சென்ற வாரம் Bangalore Mirror பத்திரிகையில் பிரசுரிக்க பட்டிருக்கிறது.