Tuesday, November 10, 2009

பரோலில் தொலைந்த நீதி


டெல்லி திஹர் சிறையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் பரோலில் இரண்டு மாதம் நீதி மன்ற அனுமதியுடன் தன்னுடைய உடல் நிலை சரியில்லாத தாயை பார்க்க வெளியே வந்தார் 'மனு ஷர்மா' என்ற குற்றவாளி. இவர் ஜெச்சிக்கா லால் என்ற பெண்ணை கொன்ற குற்றத்திற்காக டெல்லி உயர் நீதி மன்றத்தினால் சிறையில் அடைக்கப்பட்டவர். காங்கிரஸ் பிரமுகர் மற்றும் கட்சி தொடர்பு இப்பொழுதும் நிறைய உண்டு இவருக்கு. இப்பொழுதும் டெல்லியை ஆண்டு கொண்டிருக்கும் காங்கிரஸ் அரசின் ஒப்புதலுடனேயே வெளியே வர அனுமதி கிடைத்திருக்கிறது.

ஆனால், வெளியே வந்த மனு ஷர்மா, தன் தாய் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறப்ப்படும் சண்டிகர் நகரிலிருந்து நீதிமன்ற அனுமதி இல்லாமலேயே டெல்லியில் உள்ள ஒரு நைட் கிளப் ஒன்றில் கடந்த சனிக்கிழமை இரவு இருந்ததாக செய்திகள் வந்து இது மிக பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதில இன்னொரு திருப்பம் என்னவென்றால், எந்த தாய் உடல் நிலை சரி இல்லை என்று கூறி வெளியே வந்தாரோ அந்த அவருடைய தாயே கடந்த வாரம் சண்டிகர் நகரில் பத்திரிக்கை சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டதுதான். இப்போது பொய் சொல்லி சிறைக்கு வெளியே வந்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சூட்டப்பட்டுள்ளது.

இந்த களேபரத்தின் சூடு தாங்க முடியாமல் டெல்லியை ஆளும் காங்கிரஸ் அரசு தனது போலிசை விட்டு மனு ஷர்மா டெல்லி நைட் கிளப்புக்கு வந்தாரா என்று ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு இட்டுள்ளது. இதற்க்கு இடையில், நல்ல பிள்ளை போல், நைசாக திஹர் சிறைக்கு சென்று தன்னை ஒப்படைத்துக்கொண்டுள்ளார் மனு ஷர்மா. அவரது பரோல் முடிய இம்மாதம் 22 ம் தேதி வரை நேரம் இருந்தும், தன்னுடைய குட்டு வெளிப்பட்டு விட்டதால் ஒரு சின்ன பிராயச்சித்தம் போல, 12 நாட்கள் முன்னாலேயே தன்னுடைய பரோலை முடித்துக்கொண்டு விட்டார். இந்த களேபரம் அனைத்திலும் டெல்லி முதல் மந்திரி ஷீலா தீக்ஷித்தின் தலைதான் உருண்டு கொண்டு இருக்கிறது.

ஷீலா தீக்ஷித் என்னதான் நல்ல ஆட்சி செய்தாலும், அவருக்கு கருணாநிதி போல சாமர்த்தியம் கொஞ்சமும் இல்லை என்றே தோன்றுகிறது. இதுவே கருணாநிதி அவர் இடத்தில் இருந்திருந்தால், பரோலாவது ஒன்றாவது. கடந்த அக்டோபர் மாதம் 31 ம் தேதி அன்னை இந்திராவின் நினைவு நாளை சாக்காக வைத்து, மனு ஷர்மாவை மன்னித்து சிறையிலிருந்து முழு விடுதலை அளித்திருக்க மாட்டாரா என்ன? எதற்கு தேவை இல்லாத பரோல் மற்றும் அதன் கட்டுப்பாடான விதிகள்? முதல்வர்தானே நீதி பரிபாலனம் செய்ய வேண்டும்?

வெறும் கொலை தானே செய்திருக்கிறார் மனு ஷர்மா? மன்னிப்பது முதல்வரின் குணம். மன்னிக்கப்படுவது குற்றவாளிகளின் பாக்கியம். இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொண்டு நசுங்குவது நாட்டின் நீதி பரிபாலனமும், பொது மக்களும்தான்.