Tuesday, June 2, 2009

என்ன ஒற்றுமை(!)


நடந்து முடிந்த தேர்தல்களின் முடிவை பார்க்கும்போது, எனக்கு ஒரு ஒற்றுமை கண்ணில் பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவுமே நிலையான மத்திய அரசாங்கம் அமைவதற்கு வாக்களித்து இருந்த போதிலும், தமிழ் நாட்டு மக்களும், ஆந்திர பிரதேச மக்களும் வேறொரு விஷயத்திலும் ஒற்றுமையாக வாக்களித்திருக்கிறார்கள். அதுதான் பிரிவினைவாதிகளையும், தீவிரவாத ஆதரவு சக்திகளையும் பின்னங்கால் பிடரியில் படும் அளவு ஓட ஓட விரட்டி அடித்து இருப்பது.


தமிழ் நாட்டில் ஆளும் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் தி. மு. . கூட்டணிக்கு எதிராக அண்ணா தி. மு. க. தன்னுடன் பா. . ., கம்யூனிஸ்ட் கட்சிகள், . தி. மு. க. என்று ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்கினாலும், அதனால் எதையும் சாதிக்க முடியவில்லை. ஆளும் கட்சி கூட்டணி பெரும் வெற்றி பெற்றதை தடுக்கவே முடியவில்லை.


இதற்கு முக்கியமான காரணம் எதிர் கட்சி கூட்டணி இலங்கை தமிழ் பிரச்னைக்கு தீர்வாக நினைத்து கொண்டு தீவரவாதத்திற்கு துணை போவது போல் பேசவும், இலங்கை மேல் ராணுவ நடவடிக்கை எடுப்பேன் என்று முழங்கவும் செய்ததுதான். மக்கள் ஜெயலலிதா மீது வைத்திருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் தன்னுடைய தீவிரவாத ஆதரவு பேச்சினால் அவர் தானே கெடுத்துக்கொண்டார். அவர் கூட்டி இருந்த கூட்டணி கட்சிகளை பற்றி கேட்கவே வேண்டாம். கம்யூனிஸ்ட் கட்சிகள் சீனாவை தவிர மற்ற எல்லா நாடுகளையும் துண்டாட நினைப்பவர்கள். மற்ற இரு கட்சிகளோ இலங்கை தீவிரவாதிகளின் கைக்கூலிகள். இவர்கள் வோட்டு கேட்டு பேசிய பேச்சில் மக்கள் மிகவும் பயந்துபோய், "ஆளை விடுங்கடா சாமி, உங்களுக்கு வோட்டு போட்டாதானே நீங்கள் வாலாட்ட முடியும்" என்று நினைத்து, ஆளும் கட்சி வேட்பாளர்களையே தேர்ந்தெடுத்து விட்டனர்.


ஜெயலலிதாவுக்கு இது ஒரு படிப்பினையாக இருக்கும் என்று நம்புவோம். எப்பொழுதும் இந்திய நாட்டின் இறையான்மைக்கு கட்டுபட்டே பேசியும், வோட்டு கேட்டும் வந்த அவர், இம்முறை தோல்வி பயத்திலோ இல்லை வேறு எதோ காரணத்தினாலோ முதல் முறையாக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவதுபோல் இலங்கையில் தனி நாடு கேட்டு பெறுவோம் என்று பேசியது பெரும்பாலானோருக்கு (தீவிரவாத ஆதரவாளர்களையும் சேர்த்து) மிகவும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த தோல்விக்கு பிறகாவது அவர் திருந்துவாரா என்று பார்க்க வேண்டும்.


இதே போன்று, ஆந்திராவிலும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கான கட்சியுடன் கூட்டு சேர்ந்து போட்டியிட்டது. தெலுங்கான ராஷ்ட்ர சமிதி கட்சியானது ஆந்திர மாநிலத்தை பிளவு படுத்தி, தெலுங்கான மாவட்டங்களை மட்டும் உள்ளடக்கி, "தெலுங்கானா" என்ற மாநிலத்தை உருவாக்க பாடுபட்டு கொண்டு இருக்கிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியோ, ஆந்திர மாநிலத்தை பிளவு படுத்த எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறது - இதுவரை. ஆனால், பாழாய்ப்போன வோட்டு பிச்சைக்காக, தன்னுடைய கொள்கையையே அடகு வைத்து விட்டு, நாயுடு தெலுங்கானா கட்சியுடன் கூட்டு வைத்துக்கொண்டு, "தெலுங்கானா" மாநிலம் உருவாக எல்லாம் செய்வதாக கூறிக்கொண்டு வோட்டு வேட்டையில் இறங்கினார். காங்கிரஸ் கட்சியோ எப்போதும் போலவே இப்போதும் மாநிலம் பிளவு பட சம்மதிக்க மாட்டோம் என்று கூறியே மக்களிடம் வோட்டு கேட்டது. கடைசியில், மக்கள் காங்கிரஸ் கட்சிக்கே அமோகமாக வாக்களித்து வெற்றி பெற வைத்து விட்டார்கள். ஆந்திராவில் சட்ட சபைக்கும் சேர்த்தே தேர்தல் நடந்தது என்பதால் கூடுதல் விறு விருப்பு. ஆனால், மக்கள் பிரிவினைக்கு எதிராக மிக, மிக தெளிவாகவே தீர்ப்பு அளித்து விட்டனர்.


தேர்தல் முடிந்தவுடன் தங்கள் கட்சி கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு தாங்கள் தேர்தல் கூட்டணி அமைத்ததில் தவறு செய்துவிட்டதை ஒத்துக்கொண்டார். இனிமேல் தவறுகளை திருத்திக் கொள்வதாகவும் அவர் மக்களுக்கு வாக்களித்துள்ளார். ஜெயலலிதாவுக்கும் இந்த மனப்பான்மை இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் (!).


எவ்வளவுதான் இந்த கேடுகெட்ட அரசியல்வியாதிகள் மக்களையும், நாட்டையும் துண்டாடவும், பிளவுபடுத்தவும் நினைத்தாலும் மக்கள் மிகவும் விழிப்பாகவே இருக்கிறார்கள் என்பது ஒரு சந்தோஷமான மற்றும் நிம்மதி தருகிற விஷயம். மேலும், இதில் தமிழனோ, தெலுங்கனோ என்ற பாகு பாடில்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுமே இந்த பிரிவினை மற்றும் தீவிரவாத ஆதரவு கட்சிகளுக்கு "கல்தா" கொடுப்பதை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் இதமாக உள்ளது; இந்தியாவின் எதிர்காலம் பற்றியும் நம்பிக்கை பிறக்கிறது.

3 comments:

Vijay said...

உண்மையான கருத்து. ஈழப்பிரச்னையென்பது, அரசியல்வாதிகள், உள்நாட்டுப் பிரச்னையிலிருந்து மக்களை திசை திருப்ப அவர்களுக்குக் கிடைத்த ஒரு சாக்கு அவ்வளவு தான். உள்நாட்டில் இருக்கும் ஆயிரம் ஓட்டைகளை அடைக்காமல் அண்டை நாட்டுப் பிரச்னை பற்றி மக்கள் பெரிதாகக் கவலைப் படவில்லை என்பதைத் தான், இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன. இனிமேலாவது, அரசியல்வாதிகள், இலங்கைத் தமிழர்களின் மோசமான நிலைமையை உபயோகித்துக் கொள்ளாமல் இருப்பார்கள் என்று நம்புவோம்.

மேலும், வைகோ, ராமதாஸ் மாதிரியான பச்சோந்தி அரசியல்வாதிகளுக்கு மக்கள் சரியான பாடம் புக்கட்டியிருக்கிறார்கள் :-)

R.Gopi said...

Very well analysed and written by you Arunji.

Keep it up.....

கிரி said...

பிரிவினை என்பது ஏற்று கொள்ள முடியாத செயல் தான் ...

ஆந்திர தேர்தல் முடிவுகள் எனக்கு மிகவும் ஆச்சர்யம் குறிப்பாக சிரஞ்சீவி நிலை