நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். நாரதராவது, வேண்டுமென்றே கலகம் செய்து, அதனால் பிற்பாடு நன்மை விளைய காரணமாக இருந்தார். ஆனால், தன்னால் பொது மக்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ தீங்கோ, நஷ்டமோ ஏற்பட கூடாது என்று சிந்திக்கும் ரஜினியை போன்ற ஒரு நல்ல மனிதரின் படபிடிப்பினால், தமிழக மக்களுக்கு, குறிப்பாக சென்னை வாசிகளுக்கு, இப்போது ஒரு நன்மை விளைந்திருக்கிறது.
கடந்த ஞாயிற்றுகிழமை காலை 6 மணி முதல் காலை சுமார் 10 மணி வரை, சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பான 'எந்திரன்' திரைபடத்தின் சண்டைகாட்சி படபிடிப்பு நடைபெற்றது. அரசாங்க விதிகளின்படி, முறையான அனுமதியுடனேயே இந்த படபிடிப்பு, அதுவும் விடுமுறை நாளான ஞாயிற்று கிழமை காலை வேளையில் பீக் அவர் தொடங்குவதற்கு முன்பே நடைபெற்று முடிந்தது.
ஆனால், ஊடகங்களில் இந்த படபிடிப்பை பற்றி வேண்டுமென்றே தாறுமாறாக செய்தி வெளியிட்டு, எப்படியாவது ரஜினியின் பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காகவே, இல்லாததையும் பொல்லாததையும், மற்றும் நடக்காததையும் நடந்ததுபோல் திரித்து வெளியிட்டு தங்களுக்கு திரையுலகத்தின் மேலிருந்த காட்டத்தை ஊடகங்கள் இவ்வாறு செய்தி வெளியிட்டு, தங்களின் வெறுப்பை காட்டி உள்ளன. ஒன்று விடாமல் அத்தனை செய்தி ஊடகங்களிலும், குறிப்பாக, தமிழ் செய்தி, மேலும் குறிப்பாக, வலை உலக செய்தி ஊடகங்கள் தங்களின் வெறுப்பை இந்த முறையில் காட்டி தங்களின் 'ஈகோ'வை நன்றாக சொறிந்துகொண்டு உள்ளன. "8 மணி நேரம் கத்திப்பாரா மேம்பாலத்தில் ட்ராபிக் ஜாம்" என்று பச்சை பொய்யை, கொஞ்சம் கூட கூச்சமின்றி அத்தனை பொய் பத்திரிகை காரர்களும் எழுதி ரஜினிக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுத்த முயன்றுள்ளனர்.
இந்த படப்பிடிப்பு நடந்த அடுத்த நாளே, தமிழக அரசாங்கம் பொது இடங்களில் படபிடிப்பு நடத்துவதற்கு உடனடியாக தடை விதித்து ஆணை பிறப்பித்து விட்டது. இந்த தடை உடனடியாக அமுலுக்கு வருகிறது. இனிமேல் எந்த படபிடிப்பும் போக்குவரத்து அதிகமுள்ள கத்திப்பாரா போன்ற பொது இடங்களில் நடைபெற அரசாங்கம் அனுமதிக்காது. பொது மக்களுக்கு இதனால் நிம்மதி. போக்குவரத்திற்கு இடைஞ்சல் இன்றி அவர்கள் நிம்மதியாக பயணிக்கலாம்.
உண்மையாக நடந்தது என்ன? உண்மையில் 'எந்திரன்' படபிடிப்பு நடந்தது என்னவோ விடிகாலை 6 மணி முதல் காலை 9 : 30 மணி வரைதான். ரஜினியும் தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டு சுமார் 9 : 30 மணி அளவில் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். ஒரு விடுமுறை நாள் அன்று, அதுவும் பீக் அவர் ஆரம்பிக்கும் முன்பே, படபிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டு இருந்தாலும், பொய் பத்திரிகைகள் மிகைபடுத்தி 8 மணி நேரம் பொது மக்கள் அவதி என்று எழுதியது இந்த பத்திரிகைகளின் உண்மையான நோக்கம் வேறு எதுவோ என்று சந்தேகப்பட வைக்கிறது. படப்பிடிப்பு நடந்த அந்த 3 அல்லது 4 மணி நேரத்திற்குள் 'ரஜினி'யை பார்ப்பதற்கு கூடிய மக்கள் கூட்டத்தாலும், டூ வீலர்கள் நிறுத்தியதாலும் போக்குவரத்திற்கு சிறிது பாதிப்பு நேர்ந்து இருக்கலாம். போலிசும் மெத்தனமாக இருந்து இருக்கலாம். அதற்காக இதுதான் சாக்கு என்று ரஜினியை இதில் போட்டு தாக்குவது இந்த பொய்யர்களின் உண்மையான நோக்கம் என்ன என்ற கேள்வியை எழுப்புகிறது.
இந்த பொய்யர்களுக்கு உண்மையிலேயே மக்கள் மீதும், அவர்கள் படும் சாலை அவதிகள் மீதும் அக்கறை இருந்து இருந்தால் அவர்கள் என்ன செய்து இருக்க வேண்டும்? இந்த மாதிரி, மக்கள் பயன்படுத்தும் முக்கியமான சாலைகளில் அரசாங்கம் படபிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்க கூடாது என்று எழுதி மக்கள் கருத்தை அதற்க்கு ஆதரவாக உருவாக்க வேண்டும். அதை விடுத்து, இதோ ரஜினியை போட்டு தாக்குவதற்கு இன்னொரு சாக்கு கிடைத்தது என்று பொய் செய்தி போட்டு அவரின் பெயருக்கு களங்கம் கற்பிக்க முயல்வது இந்த பொய்யர்களின் நோக்கத்தையே சந்தேகிக்க வைக்கின்றது.
சரி, இதற்குமுன் கத்திப்பாரா பகுதியில் படபிடிப்பே நடக்க வில்லையா இல்லை சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் படபிடிப்பே நடக்க வில்லையா என்ன? எவ்வளவோ படபிடிப்பு நடத்தப்பட்டு உள்ளது. மக்களும் போக்குவரத்து பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆனால், இதுவரை அதை பற்றி எவருக்கும் அக்கறையோ அல்லது இந்த மாதிரி அரசாங்கமே போக்குவரத்தை பாதிக்கும் வகையில் படபிடிப்புகளுக்கு அனுமதி கொடுக்கலாமா என்று எவரும் கேட்டதோ அதற்காக ஒரு துரும்பை கூட கிள்ளி போட்டதோ கிடையாது.
ஆனால், ரஜினி என்கிற மக்கள் செல்வாக்கு உள்ள மாமனிதன் பங்கு கொண்ட படபிடிப்பு கத்திப்பாரா மேம்பாலத்தில் நடைபெற்ற அடுத்த நாளே அரசாங்கம் விழிப்பு உணர்வு பெற்று தன்னுடைய தவறான அரசாணையை வாபஸ் பெற்றுக்கொண்டு போக்குவரத்து நெரிசல் மிக்க பொது சாலைகளிலும் மேம்பாலங்களிலும் படபிடிப்பு நடத்துவதற்கு உடனடி தடையை விதிக்கின்றது என்றால், பொது மக்கள் உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ரஜினி நடிக்காமல், வேறு உன்னை போலவோ, என்னை போலவோ ஒருவன் நடித்திருந்தால், எந்த நாயாவது அந்த படபிடிப்பை சீந்தி இருக்குமா? அதனால் இவ்வளவு பரபரப்பு ஏற்ப்பட்டு இருக்குமா? அரசாங்கம் தான் தன்னுடைய நித்திரையில் இருந்து விழித்திருக்குமா? எனவே, சென்னை வாசிகள் ரஜினிக்கு நிச்சயம் நன்றி கூற கடமை பட்டிருக்கிறார்கள்.
கத்திப்பாரா மேம்பால படபிடிப்பு யாருடைய யோசனையாக இருக்க முடியும்?
நிச்சயம் ரஜினியாக இருக்க முடியாது. அவர் "ஏன் இங்கே படபிடிப்பு வைத்துக்கொள்கிறீர்கள்? என்னை பார்க்க மக்கள் கூட்டம் கூடி விடுவார்களே? அதனால் போக்குவரத்திற்கு இடைஞ்சல் இருக்குமே" என்று நிச்சயம் கேட்டிருப்பார். 1990 களில் ஜெயலலிதா ஆட்சியின்போது, ரஜினி சொல்லியும் கேட்காமல், அவரது காரை பொதுமக்களின் கூட்டத்தோடு கூட்டமாக ஜே. வின் கார் போவதற்காக காத்திருக்க வைத்த போலீஸ் பட்ட அவஸ்தையை யார் மறந்திருக்க முடியும்? எனவே, ரஜினியின் ஆட்சேபனையையும் மீறித்தான், கத்திப்பாரா மேம்பால படபிடிப்பு முடிவு செய்ய பட்டிருக்க வேண்டும்.
இயக்குனர் ஷங்கர் இந்த விஷயத்தில் மிகவும் தெளிவானவர். அந்நியன் படத்திற்கே, சென்னையில் எந்த மேம்பாலத்திற்கும் அனுமதி கிடைக்காமல், பாண்டிக்கு சென்று "அம்பி மொபெடில் வரும் காட்சியை" படமாக்கியதை சில நேர்காணல்களில் கூறியுள்ளார். எனவே, அவரும் கத்திப்பாரா மேம்பாலத்தை முடிவு செய்திருக்க வாய்ப்பில்லை.
எஞ்சி இருப்பது 'எந்திரன்' படத்தை பாதியில் வாங்கி, இப்போது தயாரித்துக்கொண்டு இருக்கும் சன் குழுமம் தான். நம் அனைவருக்குமே தெரியும் இவர்கள் எவ்வளவு பண, அரசியல் மற்றும் அதிகார செல்வாக்கு பெற்றவர்கள் மற்றும் அதனை உபயோகப்படுத்த துளிகூட தயங்க மாட்டார்கள் என்பது. தயாரிப்பு செலவை மட்டு படுத்துகிறேன் பேர்வழி என்று ஏற்கெனவே ஷங்கர் உபயோகிக்கவிருந்த சில, பல ஹாலிவுட் மற்றும் ஹாங்காங் தொழில்நுட்ப கலைஞர்களை கழட்டி விட்டவர்கள் இந்த சன் பிக்சர்ஸ். வெளிநாட்டு படபிடிப்புக்கும் தடா போட்டு விட்டவர்கள் இவர்கள். எனவேதான் இந்த மேம்பால சண்டை காட்சிகளையும் ஷங்கர் இந்தியாவிலேயே அதுவும் சென்னையிலேயே எடுக்க வேண்டிய கட்டாயம். ஆட்சியாளர்களுடன் தங்களுக்குள்ள நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, சன் பிக்சர்ஸ் தான், சில வாரங்களுக்கு முன்பாக மதுரவாயல் மேம்பாலத்தையும், இப்போது கத்திப்பாரா மேம்பாலத்தையும், 'எந்திரன்' படபிடிப்புக்காக பயன்படுத்திக்கொள்ள உத்தரவு பெற்றிருக்க வேண்டும். போலிசும், சர்வ வல்லமை பொருந்திய சன் உரிமையாளர்களுக்கு பயந்துகொண்டு போக்குவரத்தை நிறுத்தி இருக்க வேண்டும்.
'எந்திரன்' தயாரிப்பாளர்களுக்கு வேண்டியது பண செலவு அதிகம் இல்லாமல் படம் தயாரிக்க வேண்டும். அப்படி செய்கையில், இதனால் பொது மக்களிடம் வருகிற கோபத்திற்கு ஆளாக போவது என்னவோ 'ரஜினி' என்கிற ஒரு மனிதன். எனவே, சன் ஐ பொறுத்தவரை, சிக்கனத்திற்கு சிக்கனம். கெட்ட பெயர் என்னவோ ரஜினிக்கு; அவர்களுக்கு இல்லை.
ரஜினி ரசிகர்கள் இத்தகைய செய்திகளினால் எல்லாம் துவண்டு விட கூடாது. பாபா பட வெளிஈட்டின்போதோ அல்லது குசேலன் பட வெளிஈட்டின்போதோ நாம் பார்க்காத ஊடக வெறியாட்டமா? ரஜினி என்கிற தனி மனிதனின், என்றும் அழியாத மக்கள் செல்வாக்கை கொஞ்சம் கூட பொறுத்துக்கொள்ள முடியாத வயிற்றெரிச்சல் பிடித்த ஈனபயல்களின் பொய் பிரச்சாரத்திற்கு ரசிகர்கள் யாரும் மறுபடியும் பலியாககூடாது.
ரஜினி என்னும் மனிதர், "பொது மக்களுக்கு முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்; இல்லாவிடின் அவர்களின் துன்பத்தையாவது மேலும் பெரிதாக்காமல் இருக்க வேண்டும்" என்று அல்லும் பகலும் சிந்திக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். எனவே, அவர் நிச்சயம் மக்களுக்கு போக்குவரத்து தொல்லை நேராது என்று உறுதி செய்துகொண்ட பிறகே இந்த படபிடிப்புக்கு சம்மதம் தெரிவித்திருப்பார். அதன் வெளிப்பாடுதான், படப்பிடிப்பு நடை பெற்றது ஒரு விடுமுறை தினம்; நடந்த நேரம், மக்கள் கூட்டம் வருவதற்கு முந்தைய காலை நேரம். 10 மணிக்குள் படபிடிப்பு நடந்து மேம்பாலம் மக்களின் முழு உபயோகத்திற்கு வந்து விட்டது. உண்மை இவ்வாறாக இருப்பினும், ஊடகங்கள் 'காண்டு' பிடித்து செய்தி வெளியிட்டு இல்லாத ஒன்றை, ஊதி பெரிதாக்கி 'பெரிய பிரச்னை' போல் தோற்றம் கொடுத்து விட்டன. இருப்பினும், அனைத்தும் இனிதே முடிவதுபோல், அரசாங்கமும், இத்தகைய படபிடிப்புகளுக்கு இனிமேல் அனுமதி இல்லை என்று அறிவித்து மக்களை நிம்மதி பெருமூச்சு விட செய்து விட்டது.
இப்போது மீண்டும் படியுங்கள் முதல் பேராவின் முதல் வாசகத்தை.