சென்ற வாரம் நிகழ்ந்த சில நிகழ்வுகளையும் அதனை தொடர்ந்து வந்த எதிர்மறை செய்திகளையும் சன் டிவி பாணியில் கூறுவதானால் "இது மாவீரன் வாரம்" என்று நீட்டி முழக்குவதுதான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
"மாவீரன்" என்று ஒருவரை (ஒரு கொள்ளை அல்லது கொலை அல்லது கடத்தல் செய்து நியாயமாக (!) வாழ்க்கை நடத்துபவரை பற்றி) கூறுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்று கேட்டால், உடனே நீங்கள் "அவருக்கு வீரம் இருக்க வேண்டும்" என்று அப்பாவி தனமாக கூறினால் ஒன்று நீங்கள் முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது நாட்டு நடப்பு துளியும் அறியாதவராக இருக்க வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் மாவீரன் என்று அழைக்கப்படுவதற்கு "பணம்" (மட்டும்) இருந்தால் போதுமானது. வீரம் எல்லாம் தேவையே இல்லை. பணம் பாதாளம் வரை பாயும் என்பது பழைய மொழி. புது மொழி என்ன வென்றால், பணம் ஆகாயத்திலும் (அதாங்க, இணையம்) பாய்ந்து ஒரு பேடி அல்லது தீவிரவாதி அல்லது ஏமாற்று பேர்வழியையுமே கூட "மாவீரன்" போல சித்தரிக்க வைக்கும்.
இதுதான் இப்போது அமர்க்களமாக இணையத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. எனவே, மக்களே, நான் சொல்ல வருவது என்னவென்றால், எவனாவது தீவிரவாதி தன்னை மாவீரனாக காட்ட விரும்பினால் அவன் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்:
எதிரியுடன் போரிட்டு தன் மக்களை காப்பதாக வெளி உலகிற்கு கூறிக்கொண்டு பல பேரை கட்டாய படுத்தி தனது கூட்டத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். சேரமாட்டேன் என்று எவனாவது அடம் பிடித்தால் அவன் உறவினர்களை அவன் கண்ணுக்கு எதிரிலேயே கொன்று விட வேண்டும். அப்புறம் எவன் அடம் பிடிப்பான்? ஆண், பெண் என்ற பாகுபாடோ வயதானவர் சின்னஞ்சிரியவர் என்ற மனிதாபிமானமோ சிறிதும் காட்டாமல் அனைவரையும் கட்டாயப்படுத்தி கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து பணம் திரட்ட வேண்டும். எதிரியிடமிருந்து தப்பியோடி வெளி நாட்டில் தங்கி இருக்கும் கூட்டத்திடம் மிரட்டி பணம் பறிக்கலாம். அவர்களின் சில உறவினர்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் அவர்களால் மறுக்கவே முடியாது. பணம் போதுமான அளவு இல்லை என்றால், அதனை சம்பாதிக்க வேறு எவ்வளவோ (கேடு கெட்ட) வழிகள் இருப்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும். அதாவது, கொள்ளை அடிப்பது முதல் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்துவது வரை எவ்வளவோ வழிகள் தற்போது உள்ளன என்பதையும் அறிந்து வைத்திருத்தல் பணம் சம்பாதிக்க மிகவும் உதவும்.
எதிரியுடன் சண்டை வரும்போது மற்றவர்களை மோதவிட்டு விட்டு, தான் மட்டும் சண்டை போடாமலேயே காலத்தை கடத்த வேண்டும். மற்ற அனைவருக்கும் சயனைடு குப்பிகள் கொடுத்து எதிரியிடம் சிக்கி விட்டால் கண்டிப்பாக சயனைடை உட்கொண்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று விதி செய்ய வேண்டும்.
அடுத்து, எக்கச்சக்கமாக பணம் தண்ணீராக செலவழிக்க தெரிந்திருக்க வேண்டும். அதே சமயம் சரியான முறையிலும் செலவழிக்க தெரிந்திருக்க வேண்டும். உங்களை "மாவீரன்" என்று இந்த உலகத்தில் உள்ள மக்களை (அட ஒரு சில லூசு மக்களாவது நம்ப மாட்டார்களா என்ன!) நம்ப வைக்க வேண்டும் என்பதால், உங்களை பற்றிய இல்லாததும் பொல்லாததுமான (அதாங்க புருடா) செய்திகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அவ்வகையான செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்க வேண்டும்.
இதற்காக மிக சரியான வழி நாட்டில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் (நிறைய பேர் காத்து கொண்டு இருப்பார்கள்), திரை உலகை சேர்ந்தவர்களுக்கும் (இங்கும் நிறைய கைகூலிகள் உண்டு) மற்றும் மீடியாவில் உள்ளவர்களுக்கும் (இங்கு மிகவும் கவனம் தேவை; தவறான மீடியா ஆட்களை அணுகினால் உங்கள் ஏமாற்று வேலையை உலகமே அறிந்து கொள்ள நேரிடும்) நிறைய பணத்தை அள்ளி விட வேண்டும். அதாவது லஞ்சம் கொடுத்து இந்த கைகூலிகளை உங்கள் பக்கம் வளைத்து போட்டு கொள்ள வேண்டும்.
பணம் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள்; இந்த கைகூலிகளை கண்டால் பேயும் பயந்து விலகும். எனவே, அவர்கள் உங்களை பற்றி "ஆஹா! ஓஹோ!! நீங்கள் எப்பேர்பட்ட மாவீரர்! என்னே உங்கள் வீரம்! என்னே உங்கள் சண்டை திறன்! எவ்வளவு பேர் உங்களுக்காக உயிரை கொடுக்கவும் தயாராக இருக்கிறார்கள்! (அவர்களுக்கு வேறு வழி இல்லை. அவர்கள் உயிர் கொடுக்க வில்லை என்றால் நீங்கள் அவர்கள் உயிரை பறித்து விடுவீர்கள் என்பது யாருக்கும் தெரிய போவதில்லை)." இப்படி எல்லாம் கைகூலிகள் தொடர்ந்து உங்கள் புகழ் பாடிக்கொண்டே உங்களை "மாவீரன்" என்று மக்கள் மத்தியில் உருவகப்படுதுவார்கள். நாளடைவில், நிறைய பேர் அதனை நம்பவும் தொடங்கி விடுவார்கள். இப்படியாகத்தானே, வெறும் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் தீவிரவாதியான உங்களை பற்றி "மாவீரன்" என்ற "உருவகம்" (Perception) பொது மக்களில் சில பேரிடமாவது பதிந்துவிடும்.
ஒரு புறம் உங்களின் ஆட்கள் எதிரியுடன் சண்டையிட்டு இறந்தோ அல்லது வேறு வழியின்றி தற்கொலை செய்து கொண்டோ மடிவார்கள்; மறு புறம் நீங்கள் "மாவீரன்" போல சித்தரிக்க படுவீர்கள். இதற்க்கு நடுவில் அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி நீங்களும் உங்கள் குடும்பமும் மற்றும் நெருங்கிய கூட்டத்தினரும் மட்டும் "ஜாலியாக" இருப்பீர்கள். இதனை கைகூலிகள் மறைத்துவிடுவார்கள். அப்பாவி பொது மக்களை கேடயமாக பயன்படுத்தி எதிரி உங்கள் மேல் குண்டு வீச முடியாத நிலைமையை உருவாக்கி, அப்படியே எதிரி வேறு வழியின்றி உங்களை தாக்கினாலும் உங்கள் கைக்கூலிகள் மூலம் "குய்யோ, முறையோ, எதிரி அப்பாவி பொது மக்களை தாக்குகிறான்" என்று கைக்கூலிகளை ஒப்பாரியிட வைத்து நீங்கள் அதில் நன்றாக குளிர் காயலாம்.
அப்படியும் எதிரி அப்பாவி பொது மக்களை எப்படியாவது உங்கள் கோர பிடியில் இருந்து தப்பவைத்து விட்டு உங்கள் கூட்டத்தினரை சுற்றி வளைத்து விட்டாலும் இருக்கவே இருக்கிறது உங்களின் கடைசி ஆயுதம். அதாங்க சரணாகதி. எதிரியிடம் சமரசம் பேசி வெள்ளைக்கொடி காட்டி மொத்தமாக குடும்பத்தினருடன் சரணாகதி அடையவேண்டியதுதான்.
யார் கேட்க போகிறார்கள் மாவீரன் ஆயிற்றே சரணாகதி அடையலாமா? அல்லது மாவீரனுக்கு மட்டும் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளும் கட்டாயம் கிடையாதா? அது வெறும் அப்பாவி தொண்டர்களுக்கு மட்டும் தானா என்றெல்லாம்? இருக்கவே இருக்கிறதே கைக்கூலி படை. எதற்காக அவ்வளவு பணம் செலவழித்து கைக்கூலிகளை வைத்திருக்கிறீர்கள்? இப்பொழுது இல்லாமல் எப்பொழுது அவர்கள் தங்கள் கைவரிசையை காட்டமுடியும்? எனவே கவலை படாமல் சரணடையுங்கள் - கைக்கூலிகள் அதனை "மாவீரனின் ராஜ தந்திரம்" என்று ஒரேயடியாக ஒரு போடு போட்டு விடுவார்கள் - அதனை நம்புவதற்கும் ஒரு முட்டாள் கூட்டம்தான் தயாராக இருக்கிறதே. உங்களுக்கு என்ன கவலை?
ஒருவேளை, உங்கள் வழக்கப்படி (அதாங்க நீங்க எப்படி உங்க போட்டி கூட்டத்தினரை நைசாக பேச்சு வார்த்தைக்கு அழைத்து போட்டு தள்ளிநீர்களோ அதே போல) எதிரியும் உங்கள் சரணாகதியை ஏற்றுக்கொள்வதுபோல் ஆசை காட்டி உங்களை மோசம் செய்து போட்டு தள்ளி விட்டாலும், உங்கள் கைக்கூலிகள் பார்த்துக்கொள்வார்கள், கவலை படாதீர்கள் (போர் களத்தில் இல்லீங்க, மீடியாக்களில்) . நீங்கள் செத்து விட்டாலும் உங்கள் கைக்கூலிகள் அதனை மறுத்துக்கொண்டே நீங்கள் சாகவில்லை என்றும் எங்கோ மறைந்து கொண்டு இருக்கிறீர்கள் என்றும் பொது மக்களை குழப்பி அடிப்பார்கள். கொஞ்ச நாட்கள் அவர்களுக்கும் பொழுது போகும்; வெளிநாட்டு மக்களிடம் இருந்து மேலும் கொஞ்சம் பணம் கறக்க முடியும் உங்கள் பேரை சொல்லி.
இப்படியாகத்தானே, "மாவீரன்" என்ற மாய பிம்பம் மக்கள் மத்தியில் உருவாக்க படுகிறது. பணம் இருந்தால் ஒரு கொலைகாரனும், தீவிரவாதியும் கைக்கூலிகளால் "மாவீரன்" என்று இவ்வாறுதான் சித்தரிக்க படுகிறான்.
ஆகவே, மக்களே, நீங்கள் கைக்கூலிகளிடம் உஷாராக இருந்தால் முட்டாள் ஆகாமல் தப்பிக்கலாம். இன்றைய தினத்தில் இணையத்தில் நிறைய கைக்கூலிகள் இதைதான் செய்து கொண்டு இருக்கிறார்கள். வாங்கிய காசுக்கு அவர்கள் மாரடிக்கிறார்கள். ஏமாறாமல் இருப்பது நம் ஒவ்வொருவரின் புத்திசாலித்தனத்தையும், சாமர்த்தியத்தையும் பொருத்தது.
ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். கேட்பவர்கள் உஷாராகுங்கள். இல்லையென்றால் உங்களுக்கு சங்கு ஊதிவிடுவார்கள் இந்த இணைய கைக்கூலிகள்.