Wednesday, July 1, 2009

விக்ரமாதித்தனும், வேதாளமும்


தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன், மீண்டும் முருங்கை மரத்தின் மேலேறி உச்சியில் இருந்த வேதாளத்தை தனது வாளினால் கட்டுப்படுத்தி, தன்னுடைய தோளின் மேல் ஏற்றிக்கொண்டு, மரத்திலிருந்து கீழிறங்கி காட்டிலிருந்து நாட்டை நோக்கி விறு, விறுவென்று நடக்க தொடங்கினான். தன்னை தனது தோளின் மேல் சுமந்து கொண்டு மெளனமாக நடந்து செல்லும் அரசன் விக்ரமாதித்தனை பார்த்து வேதாளம் பேச தொடங்கியது:

"விக்கிரமாதித்த மன்னனே, ஒரு நாட்டின் அரசனாக இருந்தும்கூட, என்னை சிறைபிடிக்க உன் வீரர்களை அனுப்பாமல், நீயே மீண்டும், மீண்டும் மரத்தின் மீதேறி என்னை தூக்கிக்கொண்டு உன் தோளின் மேல் சுமந்து கொண்டு வேகமாக நடந்து செல்லும் உன்னை பார்க்கும்போது, எனக்கு முன் காலத்தில் தமிழகத்தில் ஆட்சி செய்த ஒரு சிற்றரசன் கதைதான் நினைவுக்கு வருகிறது. உன்னுடைய நெடும் நடை பயணத்தின் களைப்பு தெரியாமல் இருக்க அவனுடைய கதையை கூறுகிறேன், கேட்பாயாக.

பண்டைய பாரத நாட்டிலே, மன்னராட்சி முடிந்து மக்களாட்சி மலர்ந்திருந்த சமயத்திலே, அந்நாட்டின் தென்கிழக்கு மூலையிலே அமைந்திருந்த தமிழகம் என்ற மாநிலத்திலே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் ஒரு நாட்டின் மன்னனைபோல், ஒரு சிற்றரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கு மன்னர் குல வழக்கப்படி மனைவிகளும், துனைவிகளும், அவர்கள் மூலம் நிறைய மக்களும் இருந்தனர். வயதாக வயதாக விவேகம் ஏற்படுவதற்கு பதிலாக, அவனுக்கு கேளிக்கைகளே வேண்டி இருந்தன. அந்த சிற்றரசன் குத்தாட்ட பிரியன். எப்போதும் கலை மற்றும் கும்மாங் குத்து ஆட்டங்களையும், தன்னை பற்றி பிறர் புகழ்ந்து எழுதும் கவிதைகளையும் மட்டுமே கேட்டுக்கொண்டும், பார்த்துக்கொண்டுமே காலத்தை கழித்துக்கொண்டு இருந்தான். ஆட்சி புரிவதை பற்றி கவலைப்படவே இல்லை. அதனால் அவனுடைய உறவினர்களும் மற்றும் நண்பர்களுமே நாட்டை மறைமுகமாக ஆள்கிற நிலைமை தோன்றியது. அவ்வப்போது, மக்களுக்கு தான் ஆட்சி புரிவதுபோல் சீன் காட்டுவதற்காக, அவர்களுக்கு முன் தோன்றி, ஏதாவது பேசி, அவர்களை நம்ப வைத்தே காலத்தை கழித்து வந்தான்.

இந்த சிற்றரசன் ஆட்சி புரிவதற்கு வடநாட்டு ராணியின் உதவி தேவையாக இருந்தது. அதேபோல், வடநாட்டு ராணிக்கும் அங்கே ஆட்சி புரிய சிற்றரசனின் ஆதரவு தேவை பட்டது. இருவரும் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்துகொண்டு தத்தமது ஆட்சிகளில் நன்றாக ஊழல் புரிந்து பணத்தில் கொழுத்து திளைத்தனர்.

இதற்கு நடுவே தெற்கில் உள்ள தீவு நாட்டின் அரசனுக்கு திடீரென்று ரோஷம் பொத்துக்கொண்டு வந்து அவன் அந்நாட்டின் தீவிரவாதிகளுடன் போர் புரிய ஆரம்பித்தான். இந்த போரில் சில அப்பாவி பொது மக்களும் சிக்கி அல்லல் பட்டனர். இதனை ஒரு பெரிய பிரச்னை ஆக்கி சிற்றரசனுக்கு எதிராக ஆதாயம் தேடுவதற்கு பல எதிர் கட்சிகளும், தீவிரவாத ஆதரவாளர்களும் புறப்பட்டனர். சிற்றரசனும் சாதாரணமாக தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவன்தான். ஆனால் இப்போது அவன் நிலைமையே வேறு. அவனுக்கு ஆட்சி புரிய ஆதரவு தரும் வடநாட்டு ராணிக்கு தீவிரவாதிகளுக்கு உதவி செய்வது பிடிக்காது. எனவே, சிற்றரசன் அவர்களுக்கு ஆதரவு தந்தால் அவன் ஆட்சியே "அம்போ" ஆகிவிடும் என்பது அவனுக்கு தெரிந்தே இருந்தது. ஆட்சி போய்விட்டால் குடும்ப வருமானமும் "கோவிந்தா' ஆகிவிடும் என்பதையும் அவன் மிகவும் நன்றாகவே தெரிந்து வைத்திருந்ததினால் அவன் இந்த விஷயத்தில் ரொம்பவும் அடக்கியே வாசிக்க வேண்டி இருந்தது. அதே சமயம், அவனுடைய எதிரிகள் இந்த சந்தர்ப்பத்தை ரொம்பவே பயன்படுத்தி சிற்றரசனை "படுத்த" ஆரம்பித்தனர். இருதலைக்கொள்ளி எறும்பாக தவித்த சிற்றரசனுக்கு, அவனுடைய மிக நீண்ட கால அரசியல் அனுபவமும், மக்களின் சுலபமாக ஏமாறும் தன்மையும் இந்த சமயத்தில் கை கொடுத்தன.

சிற்றரசன் வடநாட்டு அரசாங்கத்துக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினான், தென் தீவு அப்பாவி மக்களை காப்பாற்ற சொல்லி. அவனுக்கும் தெரியும், வடநாட்டு ராணிக்கும் தெரியும் அந்த கடிதத்தை எந்த குப்பை தொட்டியில் போட வேண்டும் என்று. ஆனால், மக்கள் இந்த தள்ளாத (!) வயதிலும் தென் தீவு மக்களுக்காக அவன் கடிதம் எழுதி போராடுவதை (?) ரசித்தனர். எதிர்க்கட்சிகளுக்கோ ஒரே வயிற்றெரிச்சல்.

அடுத்ததாக கொட்டும் மழையில் தென் தீவு மக்களுக்காக மனித சங்கிலி போராட்டம் நடத்தினான். மக்களும் அதனை மிகவும் ரசித்து பார்த்தனர். ஒருவருக்கும் இதனால் ஒரு பைசாவுக்கும் உபயோகம் இல்லை என்று தெரிந்திருந்தும்.

தள்ளாத வயதில் குத்தாட்டங்களை பார்ப்பதற்கும், உபயோகமில்லாத கடிதங்கள் எழுதுவதற்கும் நேரம் செலவிட்டதால், சிற்றரசன் முதுகு வலியால் அவதிப்பட ஆரம்பித்தான். மருத்துவமனையிலும் அவனை அனுமதிக்க வேண்டியதாயிற்று. அரசியலில் அனுபவசாலியான சிற்றரசன் அந்த சந்தர்ப்பத்தையும் மக்களை ஏமாற்றவே உபயோக படுத்திக்கொண்டான். மருத்துவமனையிலிருந்து வெளிவந்த சில நாட்களிலேயே திடீரென்று ஒருநாள் அதிகாலையில் தென் தீவு மக்களுக்காக உண்ணா நோன்பு இருக்கிறேன் என்று ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டான். அது மிக பெரிய செய்தியாக பரவி அனைவரும் அவனின் தியாகத்தை (?) மெச்சி அவனின் வயதையும் உடல் நலத்தையும் கருதி உன்னா நோன்பை கை விடுமாறு கெஞ்சி கூத்தாடி அதனை கைவிட வைத்தனர். அவனுக்கு மட்டும்தானே தெரியும் மருத்துவர்கள் அவன் உடல் நிலை கருதி, அன்று ஒரு நாள் அவனை சாப்பிடாமல் இருக்க சொன்னது (!).

இப்படியாகத்தானே, நோகாமல் நோன்பு கும்பிடும் செப்படி வித்தையை சிற்றரசன் பயன்படுத்தி வடநாட்டு ராணியையும் பகைத்துக்கொள்ளாமல், மக்களிடமும் கெட்டபெயர் எடுக்காமல், எதிர்கட்சிகளையும் வெறுப்பேற்றி, தன் ஆட்சியையும் பாதுகாத்துக்கொண்டான். இந்த கூத்துகளுக்கு நடுவில் தென் தீவு மக்களை பற்றி கவலை படுவதற்கு யாருக்கு நேரம் இருந்தது?

இந்த கூத்துகள் நடந்துகொண்டிருக்கும்போதே பாரத நாட்டில் தேர்தல்களும் நடந்து முடிந்தன. அதில், நம் சிற்றரசனும் வடநாட்டு ராணியும் நல்ல வெற்றி பெற்றனர். என்ன ஒன்று, வட நாட்டு ராணி எதிபார்த்ததைவிட அதிகமாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்ததால் அவளுக்கு சிற்றரசனின் தயவு முன்பைபோல இப்போது தேவைப்படவில்லை. ஆனால், சிற்றரசனுக்கு தன்னுடைய குறுநிலத்தை ஆள்வதற்கு வடநாட்டு ராணியின் உதவி முன்பை போலவே வேண்டி இருந்தது.

வடநாட்டு புதிய ஆட்சியில் பங்குகொள்ளுமாறு வந்த ராணியின் அழைப்பை ஏற்று சிற்றரசன் தன்னுடைய தள்ளாத வயதையும் பொருட்படுத்தாமல் விமானம் ஏறி வடநாட்டுக்கு பயணமானான். தென் தீவு மக்களின் அல்லலை தீர்க்க வடநாட்டுக்கு பயணிக்காதவன் இப்போது வடநாட்டு ஆட்சியில் தன்னுடைய குடும்பத்தினருக்கு "தகுந்த" பதவியை ஏற்பாடு செய்வதற்கு தன்னுடைய உடல்நிலையையும் பொருட்படுத்தாது பயணிப்பதை அனைவரும் "ஆ"வென்று வாயை பிளந்தபடி பார்த்துக்கொண்டு இருக்கத்தான் முடிந்தது.

ஆனால், மிகவும் கித்தாப்புடன் தனக்கு வேண்டியவற்றை பெற்றுக்கொள்ளலாம் என்று வடநாட்டுக்கு போனவனுக்கு "ஆப்பு" வைத்தாள் ராணி. சிற்றரசனுக்கு தற்போதைய நிலவரத்தை, அதாவது, அவனுக்குத்தான் ராணியின் உதவி தேவை, ஆனால், ராணி அவன் உதவி இன்றியே ஆள முடியும் என்னும் சூட்சுமத்தை புரிய வைத்தாள். அதனால், சிற்றரசன் தன்னுடைய மனைவியின் மூத்த மகனுக்கு மட்டுமே வடநாட்டு அமைச்சர் பதவியை பெற முடிந்தது. துணைவியின் மகளுக்கு ஒன்றுமே வாங்கி கொடுக்க முடியவில்லை. ஆனால், "கிடைத்தவரை லாபம்" என்ற கணக்கில் வருமானத்துக்கு குறைவில்லாமல் தன்னுடைய மற்ற ஆட்களுக்கு வட நாட்டில் மந்திரி பதவி வாங்கி விட்டான்.

பாதி வெற்றியுடன் ஊர் திரும்பிய சிற்றரசனுக்கு, மனைவியின் வரவேற்பு சரியாக இல்லை. என்ன காரணம் என்று பார்த்தால், சின்ன மகனுக்கு ஒன்றுமே செய்யவில்லையே என்று அவளுக்கு குறை. பாவம், தாயுள்ளம்தானே, தவித்தது. பார்த்தான் சிற்றரசன். எப்படியும் சின்னவன்தான் தனக்கு பிறகு ஒரு நாள் குறுநில ஆட்சிபீடம் ஏறவேண்டும். அந்த நாள் ஏன் இன்றாகவே இருக்க கூடாது என்று எண்ணியவன், அன்றே இளைய மகனை தமிழகத்தின் "இளவரசன்" என்று அறிவித்துவிட்டான். கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? மனைவியின் மகிழ்ச்சி அல்லவா முக்கியம். தான் ஒரு சிறந்த கணவன் என்று நிரூபித்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தான் சிற்றரசன்.

மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். அதே போல் நம் சிற்றரசனுக்கும் பாவம் இரண்டு பேரை சமாளிக்க வேண்டிய துர்பாக்கியம். மனைவியை ஒருவழியாய் சமாளித்தவனுக்கு துணைவியை சமாளிப்பது ரொம்பவே பேஜாறாகிவிட்டது. துணைவிக்கு சிற்றரசன் மேல் மிகுந்த கோபம். இருக்காதா பின்னே! மூத்தவளின் இரண்டு மகன்களுக்கு அடித்தது யோகம். ஆனால் தன்னுடைய ஒரே ஒரு செல்ல மகளுக்கு ஒன்றுமே இல்லை என்றால், எந்த தாய் மனதுதான் வாளாவிருக்கும்? துணைவியின் கோபம் தலைக்கு ஏறி, சிற்றரசனுக்கு, ஏண்டாப்பா இரண்டோடு நிறுத்தி விட்டோம். நாம் வழக்கமாக உபயோகிக்கும் சொல்லோடைபோல், எல்லாமே மூன்று மூன்றாக அடுக்குவோமே, "தமிழ்" என்னும் எழுத்து மூன்று, மா, பலா, வாழை என்னும் "கனிகள்" மூன்று, அய்யன் வள்ளுவன் இயற்றிய குரளில் "பால்கள்" மூன்று, என்பதுபோல், தானும் இரண்டோடு நிருத்தியிருக்காமல் மூன்றாவதாக ஒருவளையும் சேர்த்துக்கொள்ளாமல் விட்டது, எவ்வளவு தப்பாக போய்விட்டது, என்று நினைத்தான். இப்போது நினைத்து என்ன பயன் என்று தன் விதியை (மனதிற்குள்) நொந்துகொண்டு, தான் தினமும் வீட்டு வாசலில் திருட்டுத்தனமாக வணங்கும் "இயற்கையை" வேண்டிக்கொண்டு, துணைவியின் வீட்டுக்குள் அவளை எவ்வாறு சமாதான படுத்துவது என்று சிந்தித்தவாறே நுழைந்தான்."

இவ்வாறு சிற்றரசன் கதையை கூறி நிறுத்திய வேதாளம் விக்ரமனை பார்த்து கேட்டது: "இவ்வளவு நேரம் இக்கதையை கேட்ட மன்னனே, இதோ என்னுடைய கேள்விக்கு விடை கூறு. துணைவியின் பாராமுகத்தால் துன்புறும் சிற்றரசன், அவளை எவ்வாறு சமாதானம் செய்வான்? தென் தீவு மக்களின் துன்பத்தை தீர்க்க தான் செய்ததுபோல் வடநாட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி துணைவியின் மகளுக்கு பதவி வாங்கி கொடுப்பானா? இல்லை, இந்த தள்ளாத வயதையும் பொருட்படுத்தாது, மறுபடியும் வானில் பறந்து வடநாடு சென்று ராணியிடம் மகளுக்காக பதவி வேண்டி கெஞ்சுவானா? இந்த கேள்விக்கு சரியான விடை தெரிந்திருந்தும் நீ கூற தவறினால், உன் தலை சுக்கு நூறாக வெடித்து சிதறிவிடும்".

இவ்வளவு நேரம் பொறுமையாக வேதாளம் கூறிய கதையை கேட்ட மன்னன் விக்ரமன் வேதாளத்தின் கேள்விக்கு விடை கூறலானான்:

"வடநாட்டு அரசாங்கத்துக்கு கடிதம் எழுதி பலன் எதிர்பார்ப்பது என்பது, அதுவும் மந்திரி பதவி, அதிலும் தான் விரும்பிய இலாகா என்பது, குதிரைகொம்பு என்பது அப்பாவியான பொது மக்களுக்கே தெரியும் என்பதால், துணைவியிடம் அந்த பாட்சா பலிக்காது என்று சிற்றரசனுக்கு மிக நன்றாகவே தெரியும்.

மறுபடியும் வடநாட்டுக்கு வானில் பரந்து போவது இந்த தள்ளாத வயதில் தனக்கு கடினம் என்றாலும், துனைவிக்காக தன்னால் அந்த சுமையை தாங்கிக்கொள்ள முடியும் என்று "எதையும் தாங்கும் இதயம்" படைத்த அந்த சிற்றரசனுக்கு நன்றாகவே புரிபட்டது. ஆனால், அப்படி போவதால் ஒரு பயனும் விளையப்போவதில்லை என்பதும் இன்னும் நன்றாகவே அவனுக்கு புலப்பட்டது. ஏனெனில், வடநாட்டு ராட்ஷசிக்கு, அதாவது, ராணிக்கு, தன்னுடைய ஆதரவு இப்போது தேவை இல்லை என்பதால், தான் குட்டி கரணம் போட்டாலும் அவள் மசியப்போவதில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்து இருந்தது.

எனவே, சிற்றரசன் மேலே கூறிய இரண்டு சமாதானங்களையும் துணைவியிடம் கூறுவதால் ஒரு பயனும் இல்லை என்று நம்பினான். துணைவிக்கும் இவை தெரிந்தேதான் இருந்தன. எனவே, துணைவியிடம் சிற்றரசன் என்ன கூறுவான் என்றால்:

"அன்பே, இவ்வளவு காலம் என்னோடு வாழ்ந்ததிலிருந்து நீ என்னை புரிந்து கொண்டு இருப்பது இவ்வளவுதானா? நான் செய்வது அனைத்திலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்பது உனக்கு தெரியாததா? மூத்தவள் மகன்கள் ஏற்கெனவே அரசியலில் ஈடுபட்டு மக்களிடம் மிகவும் கேட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டு விட்டனர். இனிமேல், அவர்கள் நல்ல பெயர் எடுப்பது என்பது "அத்தைக்கு மீசை முளைத்த கதை" தான்.

ஆனால், நம் செல்ல மகளின் கதை அப்படியா? ஒன்றுக்கும் உபயோகம் இல்லாத அவளை மக்கள் இப்போது "கவிதாயினி" என்று கூறும்படி செய்ய வைத்தது யார்? நான்தானே? என்னுடைய பல்கி பெருக்கெடுத்துள்ள வாரிசுகளிலேயே "சுமாராக நல்ல பெயருள்ளவள்" நம் செல்ல மகள்தான் என்று உனக்கும் தெரியும்தானே? அப்படிப்பட்டவளை ஒரு மந்திரியாக்கி வெகு விரைவிலேயே "ஊழல் பேர்வழி" என்று கெட்ட பெயர் எடுக்க விட்டால் நஷ்டம் நமக்குத்தானே? நம்மை போன்றவர்களுக்கும் அவ்வப்போது "நல்லவர்கள்" என்ற முகமூடி தேவைப்படும் அல்லவா? அச்சமயத்தில் நம் செல்ல மகள்தானே நமக்கு துணை? எனவேதான், அனைத்தையும் யோசித்து நம் மகளுக்கு பதிலாக மூத்தவளின் மகனுக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்தேன். ஏற்கெனவே கெட்டு போனவன்; இனிமேல் அவன் கெடுவதற்கு ஒன்றும் இல்லை.

அதே நேரம், அன்பே, உன் கவலையும் எனக்கு புரிகிறது. மூத்தவளின் வருமானத்திற்கு வழி செய்து வைத்த நான், உனக்கு என்ன செய்தேன் என்றுதானே நீ கவலைப்படுகிறாய்? விடு கவலையை. உன்னுடைய நம்பிக்கைக்கு பாத்திரமான ஆட்களைத்தானே நான் முக்கியமான துறைகளில் மந்திரிகளாக ஆக்க வைத்திருக்கிறேன்? எவ்வாறு இதனை நீ கவனிக்க தவறி விட்டாய்? உன்னுடைய ஆட்கள் உனக்கு சேரவேண்டிய வருமானத்தை, சேரவேண்டிய இடத்திற்கு, சேரவேண்டிய நேரத்தில், கட்டாயமாக சேர்த்து விடுவார்கள். ஒன்று பார்த்தாயா? என்னுடைய ஆட்கள் நிறைய பேருக்கு வடநாட்டான்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட, உன்னுடைய ஆள் பேரில் பெரும் ஊழல் குற்றச்சாட்டு இருந்தாலும் உன்னுடைய ஆள் என்ற ஒரே காரணத்திற்காக நான் வடநாட்டான் காலில், கையில் விழுந்து, உன் ஆளை அதே பதவியில் மறுபடியும் அமர்த்த வைத்து இருக்கிறேனே, இது போதாதா கண்ணே, நான் உன்னுடைய நலத்தை ஒருபோதும் கவனிக்க தவறுவதில்லை என்பதற்கு?

ஒரு புறம் உன்னுடைய நம்பிக்கையான ஆட்கள் மூலமே உன் வருமானத்திற்கு வழி. மறுபுறம் உன் அன்பு மகளின் நற் பெயர் நீடிக்கும்படி ஏற்பாடு. இதைத்தான் கண்ணே ஆங்கிலத்தில் "வின்-வின்" என்று சொல்லுவார்கள். இத்தகைய ஏற்பாட்டை உன்நலத்தை மட்டுமே கருத்தில்கொண்டு செய்துள்ள என்னைப்போய் எவ்வாறு நீ சந்தேகித்தாய்?"

இவ்வாறு சிற்றரசன் தன்னிலை விளக்கம் அளித்தபிறகும், துணைவி முறுக்கிக்கொண்டு நிற்க என்ன முட்டாளா அவள்?" என்று விக்ரமாதித்தன் வேதாளத்தின் கேள்விக்கு நீண்ட விடை அளித்தான்.

விக்ரமனின் பதிலால் மிகவும் திருப்தி அடைந்த வேதாளம் "வீரம் மட்டும் உன் கூட பிறந்ததில்லை, விவேகமும்தான், என்று உன்னுடைய தெளிவான மற்றும் சாமர்த்தியமான விடையினால் நீ நிரூபித்து விட்டாய் விக்ரமாதித்தா" என்று கூறி விட்டு மௌனத்தை கலைத்த மன்னனின் தோளில் இருந்து பறந்து மீண்டும் தான் குடிஇருந்த முருங்கை மரத்திற்கே சென்று சேர்ந்தது. மன்னன் விக்ரமாதித்தனும் தன்னுடைய மௌனம் கலைந்ததால் விடுதலை பெற்று பறந்து சென்ற வேதாளத்தை மீண்டும் கொண்டு வருவதற்காக அது குடி கொண்டு இருக்கும் முருங்கை மரம் நோக்கி திரும்பி நடக்கலானான்.

21 comments:

Geetha said...

super story

kppradeep said...

Superb writeup. Please keep writing often.
Hats off to ur writing skill.
Keep it up BOSS

rdharma said...

Arun amazing, it is not so much about the contents, which is known to all.However, the way you have presented is fantastic,never know that you can write so good in Tamil,keep it up

R.Gopi said...

அருண்ஜி

கெடைக்கற கேப்ல எல்லாம் "தலை"க்கு ஆப்பு வைக்கறீங்களே??

ஆனாலும், இந்த கதை மிகவும் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை....

மறுபடி ஒரு 23-ம் புலிகேசி படம் பார்த்த உணர்வு ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை.. அதை விடவும் இந்த கதை மிகவும் நன்றாக இருந்தது.

வாழ்த்துக்கள் மீண்டுமொரு முறை....

M Arunachalam said...

Hello GM, Pradeep, Dharma & Gopi,

Thanks to you all for visiting & for your comments.

Vijay said...

Brilliant.
ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அனுமதியுடன் என் நண்பர்களுக்கும் இந்தக் கதையை ஃபார்வேர்ட் செய்கிறேன் :-)

musicgavanzaa... said...

intha kadai mikavum arumai.........

M Arunachalam said...

//உங்கள் அனுமதியுடன் என் நண்பர்களுக்கும் இந்தக் கதையை ஃபார்வேர்ட் செய்கிறேன்//

Vijay - Pl do so by all means. And thanks for your kind words too.

RK said...

Sir, indraiya nallil varum thiraipadangalin kadhaigal ellame ellorukkum therinthathe, but nalla thiraikadhai amaintha padangal mattume vetriperuginrana.

Vungal thirakadhai amaipu thiran migavum nandraga vulladhu. Pls keep writing sorry rocking..

RK said...

Regarding subject, sitrarasan definitely will have a proper plan for a daugher. Atleast he will ensure she is busy in doing something so that there will be a media coverage, thats what she also likes. I hope this will happen in the near feature (less than 3 months).

Raja said...

அருன். மிகவும் சூப்பர எழுதி இருக்கீங்க. தமிழ் பூந்து விளையாடுது. கேப் விடமா படிச்சுட்டேன்.
நிறைய விக்ரமாதித்தன் கதைகள் படிச்சிருப்பீங்க போல.

கலக்குங்க அருன்.

M Arunachalam said...

RK/Raja - Thanks for visiting & comments.

Arulroja said...

nalla velai vethalam andha sitra arasan per enna ? andha rani per ennanu easy question ketudumonu payanthukite kadaya padichechen :-) ilamayil kalvi , naduvayathil tirumana valkai, mudumayil oiyvu ithu manithannin parimanangal...muthumayil anubavika vendiya oyvu kidaykamal alladuvathe andha sitraarasan seytha pavanagalukku kidaytha thandanai ,sitra arasanin ipodaya mulu gavanamum kadarkarayin orathil thanaku oru idam pidipathe adu nadakuma ? endru vedalam ketu irrunthal vikramathithan(arun) enna sollurarunu pathirukalam :-) hmm.

M Arunachalam said...

அருள் உங்கள் வருகைக்கு நன்றி.

//lamayil kalvi , naduvayathil tirumana valkai, mudumayil oiyvu ithu manithannin parimanangal...muthumayil anubavika vendiya oyvu kidaykamal alladuvathe andha sitraarasan seytha pavanagalukku kidaytha thandanai //

சிற்றரசன் இப்போது ஓய்வு எடுக்கவில்லை என்று நீங்கள் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அவன் ஆட்சி பொறுப்பு ஏற்றுக்கொண்டு நன்றாக ஒய்வு எடுத்துக்கொண்டுதான் இருக்கிறான் - நாளொரு குத்தாட்டம் பொழுதொரு மயிலாட்டம் என்று.

//sitra arasanin ipodaya mulu gavanamum kadarkarayin orathil thanaku oru idam pidipathe adu nadakuma ? endru vedalam ketu irrunthal vikramathithan(arun) enna sollurarunu pathirukalam//

வேதாளம் கேக்க மறந்தாலும் நீங்க விட மாட்டீங்க போல! சிற்றரசனோ, சாமான்யனோ; கடற்கரையோ, மயானமோ; கடைசியில் யாருக்குமே ஆறு அடிக்குமேல் இடம் தேவைப்படாது. சுனாமி வந்தால், அதுவும் சில நொடிகளில் கபளீகரம் ஆகிவிடும்.

R.Gopi said...

//வேதாளம் கேக்க மறந்தாலும் நீங்க விட மாட்டீங்க போல! சிற்றரசனோ, சாமான்யனோ; கடற்கரையோ, மயானமோ; கடைசியில் யாருக்குமே ஆறு அடிக்குமேல் இடம் தேவைப்படாது. சுனாமி வந்தால், அதுவும் சில நொடிகளில் கபளீகரம் ஆகிவிடும்.//

Well said Arun ji.........

Vasumathy said...

enna Thunaiviyaar veettukkulla poi nalla ottu kettu irukkeenga pola irukku...........

ANANTH MURALI said...

Dear Arunachalam,

Eppa neee Ivvlo nalla writer ana? Simply super. Hilarious stuff. Next CHO in making.

கிரி said...

அருண் கலக்கி இருக்கீங்க.. ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க..

சரளமாக உங்களுக்கு எழுத வருகிறது..இதை போல நீங்கள் இன்னும் எழுதலாம்.. சும்மா போற போக்குல சொல்ற பாராட்டு இல்லை.. உண்மையாகவே..

பதிவு முழுவதும் செம உள் குத்தா இருக்கு..ம்ஹீம் முடியல!

M Arunachalam said...

Vasu,
//enna Thunaiviyaar veettukkulla poi nalla ottu kettu irukkeenga pola irukku...........//

Aiyo! Aiyyo!! Andha kanraaviya vera paakkanumaa?

Ananth,

Thanks for visiting & commenting. I simply wrote this piece when suddenly the thought "how so & so would have managed the problems within his family for so & so not getting anything" occurred. My childhood Ambulimama reading days helped a bit.

Giri,

Thanks for your sincere wishes. True. I wanted to be as sarcastic as possible. So, obviously you would have felt "ulkuthu" throughout the piece.

dondu(#11168674346665545885) said...

இதை எனது பதிவிலும் நகலெடுத்த் போட அனுமதி தந்ததற்கு நன்றி. பார்க்க: http://dondu.blogspot.com/2010/05/blog-post_5238.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

கீதா சாம்பசிவம் said...

அருமையான விவரணை. நன்றாய் அனுபவித்து எழுதி இருக்கிறீர்கள். ஒரே குறை எழுத்தின் வண்ணம் படிக்கையில் கண்களைப் பாதிக்கிறது. (கண்ணாடிபோட்டும்) ஆகவே இயன்றால் டெம்ப்ளேட்டை மாற்றவும். உங்களுக்கு இதுதான் வசதி எனில் ஓகே. வாழ்த்துகள்.